தமிழ்நாடு

அரக்கோணத்தில் பனிமூட்டத்தின் நடுவே ஊர்ந்து சென்ற ரெயில்கள்.

அரக்கோணம், காட்பாடியில் கடும் பனிமூட்டத்தால் சென்னை ரெயில்கள் வேகம் குறைப்பு

Published On 2022-11-28 06:11 GMT   |   Update On 2022-11-28 06:11 GMT
  • சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது.
  • தேசிய நெடுஞ்சாலையில் பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.

வேலூர்:

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கடும் பனி கொட்டுகிறது. இதனால் சாலைகள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு உள்ளன.

அதிகபட்சமாக இன்று அதிகாலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடும் பனி கொட்டியது. இதனால் சென்னை- அரக்கோணம் - காட்பாடி- ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும் ரெயில்கள் வழக்கத்தை விட தாமதமாக சென்றன.

இன்று காலையில் சென்னை நோக்கி வந்த காவேரி, மைசூர், சேரன், நீலகிரி, திருவனந்தபுரம்- ஏலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னையில் இருந்து அரக்கோணம் காட்பாடி வழியாக சென்ற கோவை, சப்தகிரி, டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 4 மின்சார ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

கடும் பனிமூட்டம் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் குறைக்கப்பட்டது. அதனால் தாமதம் ஏற்பட்டது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. தேசிய நெடுஞ்சாலையில் பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.

வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். பனிமூட்டத்தால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

கடும் பனி காரணமாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தெருக்களில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர். டீ கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் சொட்டர் விற்பனை களைகட்டியது.

Tags:    

Similar News