உள்ளூர் செய்திகள்

நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி பேட்டி

Published On 2023-02-05 09:08 GMT   |   Update On 2023-02-05 09:22 GMT
  • விவசாயிகள் மீண்டும் விடுத்த கோரிக்கையின்படி நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தப்படும்.
  • செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன.

தஞ்சாவூா்:

தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் பகுதியில் இன்று மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நான், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்கள், நிலக்கடலை , உளுந்து போன்ற பயிர்களை 2 குழுக்களாக சென்று ஆய்வு செய்தோம்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் 87 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்று மாலை வரை ஆய்வு செய்ய உள்ளதால் அதன் பிறகு பாதிப்பின் விவரம் முழுமையாக தெரியவரும். மேலும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 987 ஹெக்டேரில் உளுந்து, 462 ஹெக்டேரில் நிலக்கடலை, 16900 ஹெக்டேரில் நெற்பயிர்கள் என 18324 ஹெக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்று முழுவதும் கள ஆய்வு செய்து நாளை சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் பயிர் சேத விவரங்கள் குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளோம்.

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று தருவது குறித்தும் , பாதிப்புக்கு ஏற்றவாறு எவ்வளவு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது குறித்தும் அறிவிப்பார்.இதுவரை 11.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 58 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நினைக்கப்பட்டது.

ஏற்கனவே விவசாயிகள் நெல்லின் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்த கோரிக்கையின் படி மத்திய அரசுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி வலியுறுத்தினார். அதை தொடர்ந்து மத்திய அரசு நெல்லின் ஈரப்பதம் அளவை 19 சதவீதமாக உயர்த்தியது. இந்த நடைமுறை அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது விவசாயிகள் மீண்டும் விடுத்த கோரிக்கையின்படி நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தப்படும்.

தமிழ்நாட்டில் திறந்த வெளி சேமிப்பு கிடங்கு இருக்கக் கூடாது என்பதற்காக ரூ.238 கோடி மதிப்பில் செமி குடோன்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். வருகிற 11-ந் தேதி 1.66 லட்சம் மெட்ரிக் டன் சேமித்து வைக்க கூடிய செமி குடோன்களை முதல் கட்டமாக முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். கடந்த காலங்களில் 350 அரவை ஆலைகள் தான் இருந்தன. ஆனால் தற்போது 750 அரவை ஆலைகள் உள்ளன.

செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் உள்ளன. வருகிற ஏப்ரல் மாதம் முதல் இந்தியா முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News