தமிழ்நாடு செய்திகள்

களத்தில் கலக்கிய நடிகர் சூரியின் காளை.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அதிர வைத்த காளைகள்

Published On 2023-01-18 12:32 IST   |   Update On 2023-01-18 12:32:00 IST
  • தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் வீரத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் போட்டி ஜல்லிக்கட்டு.
  • மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள்.

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் வீரத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் போட்டி ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில்

மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் 15-ந் தேதியும், பாலமேட்டில் 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந்தேதியும் நடந்தது. அவனியாபுரத்தில் 737, பாலமேட்டில் 860, அலங்காநல்லூரில் 825 என 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 2,422 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 1,200 வீரர்கள் பங்கேற்றனர்.

உலகப் பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. காலை தொடங்கியதில் இருந்து மாலை முடியும் வரை மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசலில் இருந்து திமிறிக் கொண்டு ஓடி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு பிடித்தனர். ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளையும் பல வீரர்கள் பாய்ந்து பிடித்து அசத்தினர்.

அதே நேரத்தில் ஏராளமான காளைகள் வீரர்களுக்கு போக்கு காட்டி விட்டு ஓடியது. அதிலும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இலங்கை முன்னாள் மந்திரி செந்தில் தொண்டைமான், நடிகர் சூரி, ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் காளைகள் களத்தில் நின்று விளையாடின. அவர்களது காளைகள் பிடிக்க முடியாத அளவுக்கு ஆக்ரோஷம் காட்டி வீரர்களை தூக்கி வீசி ன.

அதுமட்டுமின்றி போட்டியில் பங்கேற்ற சென்னகரம்பட்டி செல்வராணி, ஆனையூர் மாணவி தீப்தி,மதுரை சேர்ந்த வேதா, ஐராவதநல்லூர் பள்ளி மாணவி யோக தர்ஷினி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் வளர்த்த காளைகளும் களம் கண்டன. அந்தக் காளைகளும் களத்தில் கலக்கின. பல காளைகள் களத்தில் நின்று விளையாடி, வீரர்களை தூக்கி வீசியது. காளைகள் ஆக்ரோஷமாக நின்று விளையாடியதும், அனைத்து காளைகளையும் வீரர்கள் போட்டி போட்டு அடக்கியதும் பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிக பரிசுகள் தரமானதாகவும், விலை மதிப்புள்ளதாகவும் வழங்கப்பட்டன. அலங்காநல்லூரில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள், தங்க காசுகள், தங்க மோதிரம், கட்டில், பீரோ, கிரைண்டர், எல்.இ.டி. டி.வி., வால் கிளாக், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

அது மட்டுமே போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும், வாடிவாசல் அவிழ்க்காத காளைகளுக்கும் அமைச்சர் மூர்த்தி தங்கக்காசு வழங்கினார். மேலும் பல காளைகளை அடக்கிய வீரர்கள், வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்ற வாலிபருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு அமெரிக்காவின் ஹுஸ்டன் தமிழ் சங்கம் சார்பில் நாட்டு மாடு பரிசாக கொடுக்கப்பட்டது.

இந்த போட்டியில் 20 காளைகளை அடக்கி இரண்டாம் இடம் பிடித்த ஏனாதியை சேர்ந்த அஜய், 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடம் பிடித்த அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் ஆகியோருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு களத்தில் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் சுழன்று ஆட்டம் காட்டிய புதுக்கோட்டை கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அந்த காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த புதுக்கோட்டை சுரேஷ் என்பவரின் காளை மற்றும் மூன்றாம் இடம் பிடித்த உசிலம்பட்டி பாட்டாளி ராஜா ஆகியோரின் காளைக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டன.

மொத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் ஏராளமான பரிசுகளுடன் ஜல்லிக்கட்டு களத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Tags:    

Similar News