தமிழ்நாடு செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் மோசமான வானிலை- 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2022-11-09 09:26 IST   |   Update On 2022-11-09 09:26:00 IST
  • மோசமான வானிலையையொட்டி கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
  • கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. படகுகள் அனைத்தும் கரைகளில் ஓய்வு எடுத்தன.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், நல்லவாடு, துறைமுகம், தைக்கால் தோனித்துறை, ராசா பேட்டை, அக்கரைகோரி உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளன.

இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழில் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலை நம்பியுள்ளனர். இதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசை படகு, பைபர் படகு, கட்டுமரங்கள் ஆகியன உள்ளது.

இவர்கள் நாள்தோறும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனிடையே இன்று (9-ந்தேதி) வங்காள வரிகுடா கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் ஆழ்கடல் பகுதிகளில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் உடனே துறைமுக பகுதியில் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலையையொட்டி கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. படகுகள் அனைத்தும் கரைகளில் ஓய்வு எடுத்தன.

கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சுபஉப்பலவாடி ஆகிய பகுதிகளில் இன்று காலை கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கடற்கரையோரம் மணல் அரிப்பு ஏற்பட்டது. இதனையறிந்த மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு இழுத்து சென்றனர்.

Tags:    

Similar News