தமிழ்நாடு

அரியலூரில் கல்விக்கடனுக்காக விபத்தில் இறந்த மாணவனுக்கு கோர்ட்டு சம்மன்

Published On 2023-03-25 05:46 GMT   |   Update On 2023-03-25 09:34 GMT
  • திருவையாறில் நடந்த சாலை விபத்தில் அரவிந்த் எதிர்பாராத விதமாக இறந்தார்.
  • கல்வி கடன் வசூல் செய்ய இறந்த மாணவனுக்கு நேட்டிஸ் அனுப்பியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்:

அரியலூர் அருகே திருமானூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் விவசாயி. இவரது மகன் அரவிந்த். இவர் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற பின்பு கரூரிலுள்ள தனியார் கல்லூரியில் என்ஜீனியரிங் படிப்பில் சேர்ந்தார்.

அப்போது பன்னீர்செல்வம் மகனை தொடர்ந்து படிக்க வைக்க திருமழப்பாடியில் உள்ள வங்கியில் 2013-ம் ஆண்டு ரூ.2 லட்சம் கல்வி கடன் பெற்றுள்ளார். பின்னர் படிப்பை முடித்த அரவிந்தனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்துவந்தார்.

இதற்கிடையே 2022ம் ஆண்டு திருவையாறில் நடந்த சாலை விபத்தில் அரவிந்த் எதிர்பாராத விதமாக இறந்தார்.

இருப்பினும் வங்கி நிர்வாகம் கல்வி கடன்களை வசூலிக்க தீவிரம் காட்டியது. இதையடுத்து பன்னீர்செல்வம் வங்கிக்கு சென்று கல்வி கடன் செலுத்த வசதி இல்லை, எனது மகனும் இறந்து விட்டான், கல்வி கடனை ரத்து செய்யவேண்டும் என கோரி மகனின் இறப்பு சான்றிதழ் இணைத்து எழுத்து பூர்வமாக மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை முதலமைச்சருக்கும், அரசுதுறை அதிகாரிகளுக்கும், வங்கி உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அரியலூரில் உள்ள சப்-கோர்ட்டில் திருமழப்பாடியில் உள்ள வங்கி நிர்வாகம் இறந்த அரவிந்த் அவரது தந்தை பன்னீர்செல்வம் மீது கல்விகடன் வசூல் செய்ய வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அசல் வட்டி எனக்கணக்கிட்டு ரூ.5லட்சம் கேட்டு சாலை விபத்தில் இறந்த அரவிந்தன் மற்றும் அவரது தந்தைக்கு கோர்ட்டிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கல்வி கடன் வசூல் செய்ய இறந்த மாணவனுக்கு நோட்டீஸ் அனுப்பியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News