தமிழ்நாடு

காட்பாடியில் அ.தி.மு.க.வினர் மறியல் செய்த காட்சி


ரெயில்வே பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஜெயிலில் அடைப்பு- சாலை மறியல்

Published On 2022-07-02 05:15 GMT   |   Update On 2022-07-02 05:39 GMT
  • காட்பாடி ரெயில்வே பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
  • அ.தி.மு.க., நிர்வாகிகள் காட்பாடி போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் செய்தனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில்வே பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.நேற்று முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

நேற்று காலை அ.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையிலான அ.தி.மு.க.வினர் பாலத்தின் அருகே திரண்டு வந்தனர். அவர்கள் பாலத்தின் மீது ரிப்பன் கட்டினர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பாலத்தை சீரமைக்க நாங்கள் தான் காரணம்.தற்போது நன்றாக சீரமைக்க வில்லை.பணத்தை வீணடித்து விட்டதாக தெரிவித்தனர்.தொடர்ந்து அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க பிரமுகர்கள் வன்னியராஜா, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் தி.மு.க. வினர் அங்குத் திரண்டு வந்தனர். அவர்கள் எஸ்.ஆர்.கே.அப்புவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்படும் சூழ்நிலை உருவானது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அ.தி.மு.க., தி.மு.க மோதலால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இரு தரப்பையும் சமாதானம் செய்து போலீசார் அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் பவித்ரா காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் காட்பாடி டி.எஸ்.பி. பழனி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் காட்பாடி செங்குட்டையில் உள்ள அப்புவின் வீட்டுக்கு சென்றனர்.

தகவல் அறிந்த அ.தி.முக.நிர்வாகிகள் அப்பு வீட்டின் முன்பு குவிந்தனர். அப்புவை காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடமும் மற்ற நிர்வாகிகளிடமும் விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, காட்பாடி பகுதி செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் மீது ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதனை கண்டித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் காட்பாடி போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் செய்தனர்.

பின்னர் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பகுதி செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோரை வேனில் இரவு 8.15 மணிக்கு ஏற்றினர். வேன் முன்பு அ.தி.மு.க., நிர்வாகிகள் திரண்டு வேன் செல்ல விடாமல் தடுத்தனர்.

பின்னர் பாதுகாப்புக்கு நின்றிருந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் அ.தி.மு.க., நிர்வாகிகளை அப்புறப்படுத்தி வேன் செல்ல வழிவகை செய்தனர்.

தொடர்ந்து காட்பாடி போலீஸ் நிலையத்திற்குள் பொதுமக்கள் யாரும் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து காட்பாடி மாஜிஸ்திரேட் முன்பு எஸ்.ஆர்.கே. அப்பு மற்றும் பகுதி செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் காட்பாடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News