தேவகோட்டையில் வாகன சோதனையில் அடாவடி போலீசார் செல்போனை பறித்ததால் வாலிபர் தற்கொலை
- தேவகோட்டையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- அரவிந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவங்ககை அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை திருகப்பூரார் தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 52). இவரது மனைவி ராக்கம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
2-வது மகன் அரவிந்த் (வயது 23) படித்து முடித்து விட்டு இன்னும் சில நாட்களில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல இருந்தார். இந்த நிலையில் நேற்று அரவிந்த் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
தேவகோட்டையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அரவிந்த்தை வழி மறித்து நிறுத்திய போலீசார் ஆவணங்களை கேட்டு சரிபார்த்தனர். பின்னர் அதில் விபரங்கள் சரியில்லை என்று கூறி அரவிந்த்தை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.
போலீசாரின் அடாவடியால் மன உளைச்சலில் அரவிந்த் வீடு திரும்பினார். இதற்கிடையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தனியறையில் இருந்த அரவிந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை ஜேசுராஜ் தேவகோட்டை டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், போக்குவரத்து போலீசார் ஆவணங்களை சரியில்லை என்று கூறி எனது மகன் சென்ற மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த நான் உடனே சம்பவ இடத்திற்கு சென்று போலீசாரிடம் அபராதம் கட்டி விடுகிறேன். மோட்டார் சைக்கிளை விடுவித்துக் கொடுங்கள் என்று கூறினோம். அதன்படி வாகனத்தை விடுவித்த போலீசார் எனது மகன் அரவிந்த்தின் செல்போனை பறித்து கொண்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்த் வீட்டிற்கு வந்தபின் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தனியாக பேசியபடி இருந்த அரவிந்த் தலைமுடியை பிடுங்கிக் கொண்டார். மறுநாள் காலையில் ஆஸ்பத்திரி செல்ல திட்டமிட்ட நிலையில் தனியறையில் அரவிந்த தூக்குப்போட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணை என்றபேரில் செல்போனை பறித்து கொண்டதால் மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேவகோட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களில் வெளி நாட்டு வேலைக்கு செல்ல இருந்த மகனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதற்கிடையில் அரவிந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவங்ககை அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தேவகோட்டையில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.