தமிழ்நாடு செய்திகள்

35-வது நினைவு நாள்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

Published On 2022-12-24 11:06 IST   |   Update On 2022-12-24 11:06:00 IST
  • எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரை சாலை பரபரப்பாக காணப்பட்டது.
  • சென்னையில் பல இடங்களில் எம்.ஜி.ஆர். உருவப்படங்களை வைத்து தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக வந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இது தவிர அரசியல் கட்சியினரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

எடப்பாடி பழனிசாமி காலை 10.30 மணிக்கு அங்கு வந்தார். அவர் கருப்பு சட்டை அணிந்திருந்தார். அப்போது தொண்டர்கள் அவரை வரவேற்று கோஷமிட்டனர். எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.பி.வேலுமணி, வைகை செல்வன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, மற்றும் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதி ராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, கே.பி.காந்தன், தி.நகர் சத்யா மற்றும் கோவை சத்தியன், இலக்கிய அணி இணைச்செயலாளர் டி.சிவராஜ், இ.சி.சேகர், முகப்பேர் இளஞ்செழியன், உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அங்கு போடப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. உறுதிமொழியினை அவர் படிக்க கூடியிருந்த தொண்டர்கள் ஏற்றனர்.

இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக வந்து மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு உள்ள மேடையில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உறுதி மொழி எடுத்தார். அவரை வரவேற்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மகிழன்பன், டாக்டர்.சதீஷ், கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அ.தி.மு.க.வினர் 4 அணியாக தனித்தனியாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினாலும் ஒரே கொடியினை பிடித்து வந்தனர். எடப்பாடி பழனிசாமி அணியினர் ஒரு குழுவாகவும், ஓ.பி.எஸ். அணியினர் மற்றொரு குழுவாகவும் வந்து வரவேற்க காத்து இருந்தனர்.

இதனால் அங்கு அசம்பாவீதம் எதுவும் நிகழாத வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரை சாலை பரபரப்பாக காணப்பட்டது. அரசியல் கட்சியினர் கூட்டம், கூட்டமாக ஆங்காங்கே கூடி நின்றனர். மெரினாவில் பொது மக்களும் அவரது நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் சென்னையில் பல இடங்களில் எம்.ஜி.ஆர். உருவப்படங்களை வைத்து தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு பகுதியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் காலையிலேயே எம்.ஜி.ஆர். படத்தின் தத்துவ பாடல்களை ஒலிபரப்பினர்.

Tags:    

Similar News