தமிழ்நாடு செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி- எக்கியார்குப்பம் கிராம மக்கள் மறியல்: கலெக்டர் சமரச பேச்சுவார்த்தை

Published On 2023-05-14 17:15 IST   |   Update On 2023-05-14 17:15:00 IST
  • கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.
  • கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவகிராமத்தை சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானார்கள். மேலும் 7 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எக்கியார் குப்பத்தில் பதட்டம் நிலவிவருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர். எக்கியார் குப்பத்தில் உள்ள பூமீஸ்வரர்கோவில் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் கண்ணீர்மல்க மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் காத்து நின்றது.

கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News