தமிழ்நாடு செய்திகள்

கோவில்பட்டியில் ஏ.டி.எம்.மில் ரூ.200-க்கு பதிலாக 20 ரூபாய் வந்ததால் பரபரப்பு

Published On 2023-02-28 11:36 IST   |   Update On 2023-02-28 11:36:00 IST
  • ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு 100 ரூபாய் நோட்டு, இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் என ரூ.3,500-க்கு பதில் ரூ.3,140 மட்டுமே வந்துள்ளது.
  • ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏ.டி.எம்.மையத்தில் படர்ந்தபுளியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அய்யப்பன் என்பவர் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.3,500 எடுத்துள்ளார்.

அப்போது ஆறு 500 ரூபாய் நோட்டுகள், ஒரு 100 ரூபாய் நோட்டு, இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் என ரூ.3,500-க்கு பதில் ரூ.3,140 மட்டுமே வந்துள்ளது.

ரூ.200 நோட்டுகளுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டுகள் வந்தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அய்யப்பன் இது தொடர்பாக புகார் செய்ய முயன்ற போது, அந்த மையத்தில் எவ்வித தொடர்பு எண்ணும் இல்லை என்பதால், அவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அய்யப்பனிடம், 20 ரூபாய் நோட்டு ஏ.டி.எம்.டில் வர வாய்ப்பு இல்லை. இருந்த போதிலும், இது குறித்து மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு நடந்திருந்தால் இன்னும் 3 நாட்களுக்குள் உங்களது வங்கிக் கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News