தமிழ்நாடு

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு

Published On 2024-03-16 06:30 GMT   |   Update On 2024-03-16 06:49 GMT
  • ஆன்மிகப் பெரியோர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு கூட்டத்தில்," தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024-ம் ஆண்டில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு உலகம் முழுவதும் உள்ள சமயப் பெரியோர்கள், ஆன்மிக அன்பர்கள், முருக பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தல், வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்று, அவர்களுக்கான வசதிகளை செய்து தருதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 20 உறுப்பினர்கள் கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவராக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளரும், உறுப்பினர் செயலராக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும் உறுப்பினர்களாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர், கூடுதல் ஆணையர்கள், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் மு.வெ.சத்தியவேல் முருகனார், சுகி.சிவம், தேச மங்கையர்க்கரசி, ந.ராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், பழனி தண்டா யுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் க.சந்திரமோகன், திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News