ஈரோட்டில் இன்னும் 1.69 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை- சுகாதாரத்துறையினர் தகவல்
- ஈரோடு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 23,77,315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.
- முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 16 லட்சத்து 40 ஆயிரத்து 38 பேர் போட்டு உள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டது. முதலில் முன்கள பணியாளர்களுக்கும், அதன் பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
அதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா தாக்கத்தால் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. எனவே தடுப்பு நடவடிக்கையாக முதலில் 15 முதல் 18 வயதுடைய மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன.
இதேபோல் முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலும் கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் தடுப்பூசி போடும் பணி முடிக்கி விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 23,77,315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசியை இதுவரை 16 லட்சத்து 40 ஆயிரத்து 38 பேர் போட்டு உள்ளனர். இது 91 சதவீதம் ஆகும். 13 லட்சத்து 71 ஆயிரத்து 7 பேர் 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். இது 76 சதவீதம் ஆகும்.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 69 ஆயிரத்து 62 பேர் இன்னமும் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை.
இதேபோல் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்தம் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் முதல் தவணை தடுப்பூசியை 89 ஆயிரத்து 11 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 80,476 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.
இதேபோல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் மொத்தம் 66 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதில் இதுவரை 54 ஆயிரத்து 926 பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். 45 ஆயிரத்து 728 பேர் 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.