பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு- 13 கிராம மக்களின் பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார்
- ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக நடந்து செல்ல 13 கிராம மக்கள் குவிந்தனர்.
- மூங்கில் மண்டபம் பஸ் நிலையம், மேட்டுத்தெரு ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்:
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை அதிகரிப்பு, பயணிகள் பெருக்கம் ஆகியவற்றால் எதிர் வரும் காலங்களில் கூடுதல் விமானங்களை கையாள முடியாத நிலை உருவாகும் என ஆய்வு செய்யப்பட்டது.
அதிக விமானங்களை இயக்கவும், பயணிகளை கையாளும் வகையில் சர்வதேச தரத்தில் புதியதாக மற்றொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன.
இன்னும் 10 ஆண்டுகளில் தற்போதுள்ள விமான நிலையம் பெரிய நெருக்கடியை சந்திக்கக் கூடும். அதிக விமானங்கள் ஒரே நேரத்தில் இறங்கவும், ஏறவும் ஓடு தளங்கள் கூடுதலாக அமைக்க வேண்டிய நிலை உள்ளது.
அந்த அடிப்படையில் சென்னையின் 2-வது மிகப்பெரிய விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு முடிவு செய்யப்பட்டது.
தற்போது உள்ள சென்னை விமான நிலையத்தில் இருந்து புதிதாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ. தூரமாகும். காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைகிறது.
புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் மற்றும் சுற்றுப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இத்திட்டம் அறிவித்தது முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிராம மக்களுடன் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் ஈடு செய்யக்கூடிய வகையில் உரிய நிவாரணம், வீட்டில் ஒருவருக்கு வேலை, மாற்று இடம் போன்றவை வழங்கப் படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று இத்திட்டத்தை கைவிடுமாறு மனு கொடுப்பதாக அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து போராட்டக் குழுவினருடன் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் கிராம மக்களின் எதிர்ப்பு குறித்து அரசிடம் தெரிவிப்பதாகவும், அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும் அவர்களிடம் எடுத்து கூறினர்.
இதனை போராட்டக் குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. திட்டமிட்டப்படி இன்று (திங்கட்கிழமை) கிராம உரிமை மீட்பு பேரணி நடைபெறும் என்று அறிவித்தனர்.
அதன்படி ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக நடந்து செல்ல 13 கிராம மக்கள் இன்று காலையில் குவிந்தனர். குடும்பம் குடும்பமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏகனாபுரத்தில் திரண்டனர்.
இதற்கிடையில் கிராம மக்கள் பேரணியை சமாளிக்க காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். 13 கிராமங்களை சேர்ந்த எல்லையில் சோதனை சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மூங்கில் மண்டபம் பஸ் நிலையம், மேட்டுத்தெரு ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் திட்டமிட்டப்படி காலை 8 மணிக்கு கிராம மக்கள் பேரணியாக புறப்பட்டனர். ஏகனாபுரத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்ற அவர்களை கிராம எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் போராட்டக் குழுவினருடன் 9 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய இழப்பீடு, நிவாரணம் பெற்று தருவதாக எடுத்துரைத்தார். அதனை போராட்டக்குழு பிரதிநிதிகள் ஏற்கவில்லை.
இத்திட்டத்தை கைவிட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்படி வலியுறுத்தினர். இறுதியில் இதுகுறித்து அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதையடுத்து பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கிராம மக்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் பேரணி காரணமாக காஞ்சிபுரம் மற்றும் பரந்தூர், ஏகனாபுரம் பகுதியில் பதட்டமும், பரபரப்பும் காணப்பட்டது.