தமிழ்நாடு செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: அடையார் முதல் மாமல்லபுரம் வரை 10 சொகுசு பஸ்கள்- இலவசமாக சென்று வரலாம்

Published On 2022-07-27 12:32 IST   |   Update On 2022-07-27 12:32:00 IST
  • செஸ் போட்டியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகளும் சென்னை வந்துள்ளனர்.
  • சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய ஓட்டல்களில் தங்கி உள்ளனர்.

சென்னை:

செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக நாளை துவங்குவதையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.

இது தவிர செஸ் போட்டியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகளும் சென்னை வந்துள்ளனர்.

இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய ஓட்டல்களில் தங்கி உள்ளனர். விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள அனைத்து ஓட்டல்களும், இவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களிடம் ஆட்டோ டிரைவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதற்காக மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலா நட்பு வாகனம் என்ற பெயரில் 25 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று தொடங்கி வைத்தார்.

வெளிநாட்டு வீரர்கள், சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும்போது அதிக கட்டணம் கேட்கக்கூடாது என்றும், இன்முகத்துடன் சரியான கட்டணம் வாங்க வேண்டும் என்றும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் செஸ் விளையாட்டு வீரர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு வசதியாக 10 சொகுசு பஸ்களும் தொடங்கி வைக்கப்பட்டன.

மாமல்லபுரத்தில் இருந்து 5 பஸ்களும், அடையாறில் இருந்து 5 பஸ்களும் அவ்வப்போது சென்று வரும். இதில் பயணம் செய்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.விளையாட்டு வீரர்கள் வசதிக்காக சுற்றுலா தலங்களில் பஸ்கள் நின்று செல்லவும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News