தமிழ்நாடு

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் படகு இல்லம், பூங்காக்கள்

Published On 2023-03-30 04:59 GMT   |   Update On 2023-03-30 04:59 GMT
  • கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
  • ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம்.

ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டிற்கு கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். இதேபோல், பள்ளி விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.

நடப்பு ஆண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நெருங்கி வருகிறது. இதையொட்டி, ஏற்காட்டு சுற்றுலா தலம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதையடுத்து படகு இல்லத்தில் உள்ள படகுகளுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கோடை காலம் தொடக்கத்திலேயே ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இங்கு இதமான சூழல் நிலவுகிறது.

எனவே இந்த இதமான சூழலை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் இங்குள்ள பூங்காக்களிலும் வண்ணமயமான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு, பூங்காக்களும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏற்காடு சுற்றுலா தலத்தில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மலர்க் கண்காட்சிக்காக முன்னேற்பாடு பணிகளில் தோட்டக்கலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்யத் தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் ஏராளமான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் வகைகளும் நடவு செய்யப்பட்டு வருகிறது.

ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால் தற்போது, ஏற்காட்டில் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளரத் தொடங்கியுள்ளன. எனவே, கோடை விழா தொடங்கும்போது நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக்குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும் என்றனர்.

Tags:    

Similar News