தமிழ்நாடு

பயணிகள் வருகை திடீர் உயர்வு- ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு

Published On 2023-05-01 06:34 GMT   |   Update On 2023-05-01 06:55 GMT
  • சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்காக ரூ.3,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
  • குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல வந்தவர்கள் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.

சென்னை:

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

அவர்கள் கோடை விடுமுறையை சொந்த ஊரில் கழித்து விட்டு பள்ளிகள் ஆரம்பிக்கும் போது சென்னைக்கு வருவது வழக்கம். இதனால் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. மே மாதம் முழுவதுமே ரெயில்கள் நிரம்பிவிட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களையே நம்பி உள்ளனர்.

இன்று மே தின விடுமுறை என்பதால் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

முன்பதிவு செய்த பயணிகள் திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு சிரமம் இன்றி பயணம் செய்தனர்.

ஆனால் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் முன்பதிவு செய்யாமல் வந்த பயணிகள் பஸ்களில் இருக்கை கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால் அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ் நிலையங்களுக்கு படையெடுத்தனர்.

இதன் காரணமாக ஆம்னி பஸ் நிலையங்களில் பயணிகளின் வருகை திடீரென்று உயர்ந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு அதிகரிக்கப்பட்டது.

குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்காக ரூ.3,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல வந்தவர்கள் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.

இந்த திடீர் கட்டண உயர்வு தொடர்பாக பயணிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

மே மாதம் பள்ளி விடுமுறையில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விரைவு பஸ்களுடன், பிற போக்குவரத்து கழக பஸ்களையும் சேர்த்து போதுமான அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை வரவழைத்து அவர்களை அதில் ஏற்றி உடனுக்குடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம்.

ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக புகர்கள் வருகிறது. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் தலைமையில், பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அதன் மூலம் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு தடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News