தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி ஆய்வு
- மழை நீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வெளியே செல்லாமல் மழைநீர் ஊருக்குள்ளும் புகும் நிலை உள்ளது.
- ஊராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டது.
பொன்னேரி:
கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக ஆமூர் வெள்ளோடை நரசிங்கபுரம் கொடூர், பெரவளூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் மழைநீர் வழிந்தோடி பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மழைநீர் கால்வாய் வழியாக வெள்ளக்குளம் வழியாக காட்டூர் ஏரியில் கலக்கின்றன.
இந்நிலையில் மழை நீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வெளியே செல்லாமல் மழைநீர் ஊருக்குள்ளும் புகும் நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டது.
இதனை பொன்னேரி துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மீஞ்சூர் சேர்மன் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன், பார்வையிட்டு மழைநீர் கால்வாய் ஓடையை ஆய்வு செய்தனர். பின்னர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள செடி கொடிகளை அகற்றி தூர்வாரி, தனியார் பள்ளி மற்றும் கம்பெனிகள் மழைநீர் கால்வாய் மீது அமைத்துள்ள சிறிய சிமெண்ட் பலகைகளை அகற்றி பெரிய கல்வெட்டு அமைக்க உத்தரவிட்டனர்.
மேலும் தனியார் குடிநீர் கம்பெனியில் பிளாஸ்டிக் கழிவுகள் ஓடையில் கொட்டப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் செல்ல வழி இல்லாமல் நிலத்தடி நீர் மாசடைந்து காணப்படுவதால் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி பார்வையிட்டு கம்பெனி நிர்வாகத்திடம் எச்சரிக்கை செய்தார். இதில் நெடுஞ்சாலை துறை அதிகாரி பாலச்சந்தர், ஊராட்சி தலைவர் பாபு, துணைத்தலைவர் சபிதா பாபு ஊராட்சி செயலாளர் நாகம்மாள் மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன் மற்றும் கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.