தமிழ்நாடு

ஸ்ரீவைகுண்டம் பஜார் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.

தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தை பிரிக்க எதிர்ப்பு: ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரியில் கடைகள் அடைப்பு

Published On 2024-03-15 07:11 GMT   |   Update On 2024-03-15 09:51 GMT
  • தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
  • ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்த தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாகப் பிரித்திட திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தை இரண்டாகப் பிரிக்க கூடாது. மீண்டும் பழைய முறைப்படி இந்த அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்படுவதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஸ்ரீவைகுண்டத்தில் மேல ரதவீதி, கீழ ரதவீதி, பேருந்து நிலையம் மற்றும் பஸ் சுற்றியுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்திலேயே இயங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் வக்கீல் கருப்பசாமி, வியாபாரி சங்கத் தலைவர் காளியப்பன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் கந்த சிவசுப்பு, தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, தாமிரபரணி பாசன திட்ட குழு முன்னாள் தலைவர் உதயசூரியன், பாசன விவசாய சங்க தலைவர்கள் சீனிப்பாண்டியன், வைகுண்ட பாண்டியன், தியாகசெல்வன், பரமசிவன், துரையப்பா, பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் விவசாய சங்க தலைவர் அலங்காரம், பொருநை நதிநீர் மேலாண்மை சங்க பொதுச் செயலாளர் முருகன் மற்றும் விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News