தமிழ்நாடு செய்திகள்

வேலூர் சாரதி மாளிகையில் 6 கடைகளில் பூட்டு உடைத்து கொள்ளை

Published On 2022-07-11 11:59 IST   |   Update On 2022-07-11 11:59:00 IST
  • சாரதி மாளிகை தரைதளம் மற்றும் முதல் மாடியில் உள்ள செல்போன் கடைகளில் மர்ம நபர் ஒருவர் துணிகரமாக கொள்ளையடித்து சென்றுள்ளார்.
  • சாரதி மாளிகையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

வேலூர்:

வேலூர் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகையில் 255 கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாதிமாளிகை கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.

நேற்று இரவு சாரதி மாளிகை தரைதளம் மற்றும் முதல் மாடியில் உள்ள செல்போன் கடைகளில் மர்ம நபர் ஒருவர் துணிகரமாக கொள்ளையடித்து சென்றுள்ளார்.

அங்குள்ள 6 செல்போன் கடைகளில் இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பல ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்தனர்.

இன்று காலையில் கடைக்கு வந்த வியாபாரிகள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

சாரதி மாளிகையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் கடைகளின் பூட்டை உடைக்கும் காட்சிகள், உள்ளே சென்று பொருட்களை கொள்ளையடித்து விட்டு வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

6 கடைகளில் மட்டுமின்றி மேலும் பல கடைகளில் கொள்ளை நடந்திருப்பதாக அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்தனர். அதனை போலீசார் மறுத்தனர்.

சாரதி மாளிகையில் 6 கடைகளில் மட்டும் கொள்ளை போய் உள்ளது. கொள்ளை போன பொருட்கள் மதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு கேமராவில் கொள்ளையன் உருவம் பதிவாகியுள்ளது. விரைவில் பிடிபடுவார் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News