தமிழ்நாடு

பெண்ணாடம் அருகே ஏரியில் மூழ்கி அக்காள்-தங்கை உயிரிழப்பு

Update: 2022-07-03 09:03 GMT
  • அக்காள், தங்கை 2 பேரும் ஏரியில் குளித்து வருவதாக கூறிவிட்டு சென்றனர்.
  • ஏரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலியான சம்பவத்தால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள். கூலி தொழிலாளி. அவரது மனைவி கன்னியாகுமரி. இவர்களது மகள்கள் முத்துலட்சுமி (வயது 17). சகோதரி சிவசக்தி (15).

இவர்கள் 2 பேரும் திருமலை அகரம் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றனர். திருவிழா முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள தனது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கினர்.

நேற்று மாலை அக்காள் தங்கை 2 பேரும் ஏரியில் குளித்து வருவதாக கூறிவிட்டு சென்றனர். இரவு நேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு திரும்பவில்லை.

அதிர்ச்சி அடைந்த பாட்டி தனது உறவினர்கள் உதவியுடன் தேடினார். ஆனால் 2 பேரும் கிடைக்கவில்லை. எனவே பாட்டி 2 பேத்திகளும் சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என நினைத்து இருந்தார்.

இன்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக திருமலை அகரத்தில் உள்ள ஏரிக்கு சென்றனர். அப்பொழுது 2 பெண்கள் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் ஏரிக்கு விரைந்தனர். அப்போது பாட்டியும் அங்கு விரைந்தார். ஏரியில் மிதந்தது தனது பேத்திகள் முத்துலட்சுமி, சிவசக்தி என கிராம மக்களிடம் கண்ணீருடன் தெரிவித்தார்.

தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் உடனே அங்கு விரைந்தனர். அவர்கள் அக்காள்-தங்கை 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் அக்காள்-தங்கை 2 பேரும் ஏரியில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது.

இந்த சம்பவத்தால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

Tags:    

Similar News