விளாபாக்கம் கண்டிகையில் விவசாயிகளுக்கு 5 ரூபாய்க்கு டீ வழங்கும் டீக்கடைக்காரர்
திருவள்ளூர் அருகே விவசாயிகளுக்கு 5 ரூபாய்க்கு டீ வழங்கும் கடைக்காரர்
- விளாபாக்கம் கண்டிகையை சுற்றி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
- டீக்கடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் அருகே செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் விளாபாக்கம் கண்டிகை பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் சுதாகர். இவர் தந்தை காலத்தில் இருந்து இந்த டீக்கடையை நடத்தி வருகின்றார்.
விளாபாக்கம் கண்டிகையை சுற்றி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தினக்கூலி 100 முதல் 200 ரூபாய் வரை கிடைக்கிறது.
இதனால் ஒரு டீ 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுவதால் அதை வாங்கி அருந்துவதற்கு விவசாயிகள் ஒரு சிலர் யோசிக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் டீ வழங்கும் எண்ணத்தில் அவரது தந்தை காலத்தில் இருந்து குறைந்த விலைக்கு டீ விற்பனை செய்யப்படுகிறது. தனது தந்தை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டீ வழங்கி வந்ததால் அதே வழியில் தானும் மிகவும் குறைவாக 5 ரூபாய்க்கு டீ வழங்கி வருவதாக சுதாகர் தெரிவித்தார்.
இந்த டீக்கடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. மேலும் ஏராளமான சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தனது கடைக்கு டீ குடிக்க வருவதால் அன்றாட வருமானமும் பாதிப்பில்லாமல் கிடைப்பதாக தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளுக்கு 5 ரூபாய்க்கு டீ வழங்குவதால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்றார்.