தமிழ்நாடு

ரூ.2 ஆயிரம் கேட்ட வீடியோ வைரல்: சத்தியமங்கலம் வேளாண் உதவி இயக்குனர் சஸ்பெண்டு

Published On 2023-12-10 05:50 GMT   |   Update On 2023-12-10 05:50 GMT
  • இழப்பீடு பெற வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோரி டம் ஒப்புதல் பெற்று, வேளாண் துறை சான்று இணைக்க வேண்டும்.
  • ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் விசாரித்தார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில், 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியில் சாகுபடி செய்யப்படும் கரும்பு, மக்காசோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்தி வருகிறது.

அதற்கு, இழப்பீடு பெற வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோரிடம் ஒப்புதல் பெற்று, வேளாண் துறை சான்று இணைக்க வேண்டும். இவ்வாறு கடம்பூரை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்தியது. வேளாண் சான்று கோரி, சத்தியமங்கலம் வேளாண் உதவி இயக்குனர் வேலுசாமியிடம் முறையிட்டார்.

அந்த விவசாயி, தனது பையில் வைத்திருந்த மொபைல் போனில், 'வீடியோ' பதிவை 'ஆன்' செய்து வைத்து, அதிகாரியிடம் பேசி பதிவு செய்தார். அதில் அலுவலக செலவுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், இழப்பீடு தொகை ரூ. 22 ஆயிரத்தை ரூ. 24 ஆயிரமாக போட்டு தருவதாக கூறினார்.

அதற்கு அந்த விவசாயி, 'எனக்கு இதுபோன்ற விபரம் தெரியாது. நான், குன்றி மலையில் இருந்து வருகிறேன். 500 ரூபாய் மட்டும் கொண்டு வந்தேன். 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டேன். மீதமுள்ள, 400 ரூபாய்தான் உள்ளது,' என்றார்.

அதையும் மீறி அந்த அதிகாரி, யாரிடமாவது வாங்கி வரும்படி கூறியதும், தனக்கு யாரையும் தெரியாது என விவசாயி கூறுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் விசாரித்தார். இந்நிலையில், சென்னை, வேளாண் துறை இயக்குனர் சுப்பிரமணியம் வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது:-

சத்தியமங்கலம் தாலுகா குன்று கிராம விவசாயி இடம் இழப்பீடு வழங்குவதற்காக சத்தியமங்கலம் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் கே.வேலுசாமி, பேரம் பேசியதற்கான பதிவுகள் வெளியானது. இதன் அடிப்படையில், அவர் உடனடியாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். மறு உத்தரவு வரும் வரை அவர், சஸ்பெண்ட்டில் தொடர்வார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News