தமிழ்நாடு

நகை வியாபாரியிடம் ரூ.1½ கோடி கொள்ளை- கைதான 2 வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்

Update: 2023-06-10 10:11 GMT
  • கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
  • நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-3 முன்னிலையில் ஆஜர்படுத்தி 2 பேரையும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

நெல்லை:

நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). தொழிலதிபரான இவர் டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

இவர் நகைகள் வாங்குவதற்காக கடந்த 30-ந் தேதி உதவியாளர்கள் 2 பேருடன் தனது காரில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு சென்றபோது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து சுஷாந்தை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1½ கோடியை கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் 4 தனிப்படையினர் கேரள மாநிலம் திருவனந்தபுரம், மூணாறு, நெய்யாற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த செபின் ராஜி(26), எட்வின் தாமஸ்(27) ஆகிய 2 பேரை மூணாறு பகுதியில் போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்தனர். நேற்று மதியம் கேரளாவில் இருந்து நெல்லைக்கு அவர்கள் 2 பேரையும் கொண்டு வந்தனர்.

பின்னர் நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-3 முன்னிலையில் ஆஜர்படுத்தி 2 பேரையும் பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கொள்ளை சம்பவத்தில் 8 பேர் வரையிலான கும்பல் ஈடுபட்டிருக்கலாம். அதில் தற்போது பிடிபட்டுள்ள 2 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அவர்கள் தங்கியிருந்த விடுதி அறை முழுவதும் தேடிப் பார்த்தும், பெரிய அளவில் பணம் எதுவும் கைப்பற்ற முடியவில்லை. அவர்களிடம் விசாரிக்கும்போது, சக கூட்டாளிகளிடம் கொடுத்து விட்டதாக தெரிவிக்கின்றனர். இதனால் தனிப்படை போலீசார் தொடர்ந்து கேரளாவிலேயே முகாமிட்டு மீதமுள்ள 6 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரின் செல்போன் அழைப்புகளை வைத்து அவர்களுடைய கூட்டாளிகள் இருக்கும் இடத்தை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News