தமிழ்நாடு

சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல ஆம்னி பஸ்களில் ரூ.3,000 கட்டணம்: பயணிகள் புகார்

Published On 2023-12-24 09:14 GMT   |   Update On 2023-12-24 09:14 GMT
  • ஆம்னி பஸ்களில் ஏறினாலே குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
  • ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் உரிமையாளர்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

சென்னை:

சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து புத்தாண்டு பண்டிகையும் வர இருக்கிறது.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள் அனைத்தும் ஏற்கெனவே நிரம்பி விட்டன. இதன் காரணமாக சொந்த ஊர் செல்ல புற்ப்பட்டு வந்தவர்கள் ஆம்னி பஸ்களை நாடினார்கள்.

இதை கருத்தில் கொண்டு நேற்று திடீரென்று ஆம்னி கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் விரைவு பஸ்களில் இருக்கைகள் ஏற்கெனவே நிரம்பி விட்டதால் நேரடி பஸ்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மதுரை சென்று அங்கிருந்து மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் பஸ் நிலையங்களில் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆம்னி பஸ்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆம்னி பஸ்களில் ஏறினாலே குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.3,000 வசூலிக்கப்பட்டது. வழக்கமாக நெல்லைக்கு ரூ.2,000 கட்டணம் ஆகும். ஆனால் ரூ.1,000 கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

இதேபோல் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.3,700 முதல் ரூ.4,100 வரை வசூலிக்கப்பட்டது. இது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளதை விட அதிகமாகும். அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பலர் ஊருக்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுவதால், மக்கள் சிரமமின்றி பயணிக்கலாம். ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு என்று வரும் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.

இதுகுறித்து ஆம்னி பஸ் சங்கத்தினர் கூறுகையில், ' ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் உரிமையாளர்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். கூடுதலாக வசூலித்த உரிமையாளர்களிடம் இருந்து பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும்' என்றனர்.

Tags:    

Similar News