தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர் அருகே மின்தடையை கண்டித்து பொதுமக்கள் மறியல்

Published On 2023-07-16 13:30 IST   |   Update On 2023-07-16 13:30:00 IST
  • சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் அலட்சியமாக பதில் கூறினர்.
  • தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த தொழுவூரில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்து இருந்தனர்.

ஆனால் இரவு 7 மணி வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் அவதி அடைந்த பொது மக்கள் செவ்வாப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்ட போது உரிய பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீ சார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் இரவு 7 மணிக்கு பின்பு மின் சப்ளை வழங்கப்பட்டது.

இதுகுறித்து தொழுவூர் கிராமமக்கள் கூறும்போது, காலை 9 மணி முதல் முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்ததால் அதற்கு ஏற்ப எங்கள் பணிகளை மேற்கொண்டோம். ஆனால் அதற்குப் பிறகும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் அலட்சியமாக பதில் கூறினர். இதனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News