தமிழ்நாடு

திருவள்ளூரில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Published On 2023-08-03 07:06 GMT   |   Update On 2023-08-03 07:06 GMT
  • திருவள்ளூர் நகருக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
  • திருவள்ளூர் ஜெ.என் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவிட்டார்.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் இருந்து அனைத்து இடங்களுக்கும் செல்லும் வகையில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளது. நவீன வசதியுடன் அரசு ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேலும் புகழ்பெற்ற வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது.

இதனால் திருவள்ளூர் நகருக்கு தினந்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் திருவள்ளூரில் அதற்கேற்ப சாலை வசதிகள் இல்லை. குறுகிய சாலைகளே உள்ளன. அதுவும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். நடைபாதைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதேபோல் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள ஜெ.என் சாலை, சி.வி. நாயுடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்த நிலையில் திருவள்ளூர் ஜெ.என் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். நடைபாதைகளை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News