தமிழ்நாடு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறப்பு

Published On 2023-09-03 05:02 GMT   |   Update On 2023-09-03 05:02 GMT
  • சத்தியமங்கலம் அடுத்த காளிகுளம் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் உடைப்பு பெரிதாகி அதிக அளவில் நீர்கசிவு ஏற்பட்டது.
  • உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பணியாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

ஈரோடு:

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி மாலை 120 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்த சிறிது நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையாத காரணத்தால் நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நீர்திறப்பு அதிகரித்து 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தண்ணீரும் கடைமடை பகுதிக்கு சென்றடைந்தது.

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த காளிகுளம் பகுதியில் உள்ள கிளை வாய்க்காலில் உடைப்பு பெரிதாகி அதிக அளவில் நீர்கசிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் காளிகுளம் பகுதியில் முகாமிட்டு உடைப்பை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பணியாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். பின்னர் சிமெண்ட் சலவை மூலம் அடைத்தனர்.

இதன் மூலம் நீர்கசிவு சரி செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

Tags:    

Similar News