தமிழ்நாடு

சுவாமி-அம்பாள் பட்டண பிரவேசம் வந்த காட்சி

ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் பட்டண பிரவேசம் நிகழ்ச்சி

Update: 2022-08-08 09:42 GMT
  • புதுமண தம்பதிகளுக்கு நடைபெறும் மறுவீடு நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
  • இன்று மாலை வரை சுவாமி-அம்பாள் ராமர் பாதம் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருக்கல்யாண திருவிழா 17 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. திருவிழாவின் 16-வது நாளான நேற்று இரவு கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி-அம்மாள் திருஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

17-வது திருநாளான இன்று காலை சுவாமி-அம்பாள், பெருமாள் ஆகியோர் தங்க கேடய வாகனத்தில் எழுந்தருளி கெந்தமாதனபர்வ மண்டக படிக்குக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாள் காலை 7.50 மணி முதல் 4 ரத வீதிகளிலும் உலா வந்தனர்.

அப்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். புதுமண தம்பதிகளுக்கு நடைபெறும் மறுவீடு நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை வரை சுவாமி-அம்பாள் ராமர் பாதம் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இரவில் கோவிலுக்கு திரும்புவார்கள்.

இதைத் தொடர்ந்து பள்ளியறை பூஜை நடைபெறும். எனவே இன்று காலை சுவாமி-அம்பாள் பட்டண பிரவேசம் புறப்பட்டதும் கோவில் நடை மூடப்பட்டது. சுவாமி-அம்பாள் திரும்பிய பின்னர்தான் நடை திறக்கப்படும். நாளை காலைதான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். இன்று ராமர் பாதம் சென்று சாமி தரிசனம் செய்யலாம். இன்றுடன் திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருப்பதால் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags:    

Similar News