தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Published On 2023-02-02 04:33 GMT   |   Update On 2023-02-02 04:35 GMT
  • ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது.
  • பாம்பன் துறைமுகத்தில் இன்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

ராமேசுவரம்:

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (3-ந் தேதி) வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் (1-ந் தேதி) முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் தங்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது. பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் ராமேசுவரம் தீவுப்பகுதியில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தபடி உள்ளது.

இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் இன்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை. அவர்களது படகுகள் அனைத்தும் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் மட்டுமின்றி கடற்கரையோர கிராம மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News