தமிழ்நாடு

ராமஜெயம் கொலை வழக்கு- மத்திய தடயவியல் நிபுணர்கள் சென்னை வருகை

Published On 2023-01-18 03:08 GMT   |   Update On 2023-01-18 03:08 GMT
  • போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரித்து வருகின்றனர்.
  • சி.பி.சி.ஐ.டி. போலீசார் தயாரித்து வைத்துள்ள கேள்விகளுடன், டெல்லி அதிகாரிகளும் தனியாக கேள்வியை எழுப்பி இந்த விசாரணையை நடத்த உள்ளனர்.

சென்னை:

தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபயிற்சி சென்றபோது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை பாணியில் தமிழகத்தில் நடைபெற்ற கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள், ராமஜெயம் கொலையின்போது திருச்சியில் தங்கி இருந்த ரவுடிகள் பட்டியலை தயாரித்தனர். இதில் இந்த வழக்கில் 12 பேர் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டனர்.

அவர்களிடம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்துவதற்கு திருச்சி மாஜிஸ்திரேட்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி பெற்றனர். பின்னர் 12 பேருக்கும் இந்த சோதனைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதையடுத்து அவர்கள் சென்னையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர்.

எனவே இந்த விசாரணை 17-ந் தேதி (நேற்று) தொடங்கும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் நேற்று விசாரணை நடைபெறவில்லை. உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து மத்திய தடயவியல் துறை நிபுணர் மோசஸ் உள்பட 2 அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். அவர்கள் தடயவியல் துறை அலுவலகத்தை பார்வையிட்டு தாங்கள் கொண்டு வந்த உபகரணங்களை வைத்தனர்.

உண்மை கண்டறியும் பரிசோதனை இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு ஒருவரிடமும், மதியம் 2 மணிக்கு ஒருவரிடம் என தினமும் 2 பேரிடம் இந்த சோதனை நடைபெற உள்ளது. 6 நாட்களில் அனைவரிடமும் இந்த சோதனை நடத்தி முடிக்கப்படும்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கேள்விகளுடன், டெல்லி அதிகாரிகளும் தனியாக கேள்வியை எழுப்பி இந்த விசாரணையை நடத்த உள்ளனர்.

சந்தேக நபர்கள் அளிக்கும் பதில்கள் அனைத்தும் 'வீடியோ' பதிவு செய்யப்படும். உண்மை கண்டறியும் பரிசோதனை விவரங்கள் அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News