தமிழ்நாடு செய்திகள்

சாதி வன்மத்துடன் கேள்வி தாள்- நடவடிக்கை எடுக்க ராமதாஸ் கோரிக்கை

Published On 2022-07-15 13:37 IST   |   Update On 2022-07-15 13:37:00 IST
  • வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டது தான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது குற்றத்தை மூடி மறைக்கும் செயல்.
  • வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத்தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், ஹரிஜன்கள் ஆகியவற்றிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டது தான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளை பல்கலை. நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலை.யில் இருக்கும்போது இந்த குற்றம் எப்படி நடந்தது? சாதிக்கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது.

வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News