தமிழ்நாடு

தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணம் இனி அரசிடமே செலுத்த வேண்டும்- மருத்துவ கல்லூரி இயக்குனர் தகவல்

Published On 2022-09-15 10:11 GMT   |   Update On 2022-09-15 10:11 GMT
  • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த தகவல்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பார்.
  • மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு கொடுத்துவிடும்.

சென்னை:

மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது. இடமாறுதல் பெற்றவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் அந்தந்த பணியிடங்களில் சேர்ந்து விட்டனர். அவர்களின் முழு விவரங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின்போது மருத்துவர்கள் பலர் பணி சூழ்நிலை கருதி மாற்றப்பட்டிருந்தார்கள். அவர்கள் மீண்டும் பழைய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு விட்டனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த தகவல்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பார்.

கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறுமா அல்லது நேரடியாக நடைபெறுமா என்பது குறித்து அப்போது அறிவிக்கப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெற்றோர்களிடம் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த ஆண்டு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, கலந்தாய்வில் இடத்தை தேர்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட மாணவர், அதற்கான அனைத்து கட்டணத்தையும், மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவிடம் செலுத்திவிட வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாணவர், சேர்க்கை கடிதத்தை மட்டும் கொண்டு சென்றால் போதும். மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு கொடுத்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News