தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்

Published On 2023-02-13 09:32 GMT   |   Update On 2023-02-13 10:26 GMT
  • பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
  • தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்து, அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

சென்னை:

கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாகக் கூறி, சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கடந்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்து, அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழ்நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி, வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News