ஈரோடு மாவட்டத்தில் 2வது நாளாக பள்ளி-கல்லூரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
- ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 77 தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு சில பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஈரோடு:
சின்னசேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் பிளஸ்-2 மாணவி இறந்ததை கண்டித்து, மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் திடீரென அந்த தனியார் பள்ளிக்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்தனர். பள்ளி அலுவலகங்கள், வகுப்பறைகள் சூறையாடப்பட்டன. போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இதில் சில போலீஸ்காரர்களும் காயமடைந்தனர். தனியார் பள்ளிகள் தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து தமிழகம் முழுவதும் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உரிய அனுமதி இல்லாமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. எனினும் இந்த எச்சரிக்கை மீறி ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 77 தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் தனியார் பள்ளி கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய மனுக்கள் கொடுத்தனர்.
இன்று 2-வது நாளாக ஒரு சில பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் கல்லூரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.