விராலிமலை அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை
- போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.
- டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி-தென்னலூர் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது.
இங்கு அந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் மது குடித்து வருகின்றனர். தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும். நேற்று விடுமுறை தினம் என்பதால் கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது.
இந்த கடையில் மேற்பார்வையாளராக துரைராஜ் என்பவரும், விற்பனையாளர்களாக செந்தில்குமார், பாண்டியன், சோலை ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர்.
வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 10.30 மணியளவில் ஊழியர்கள் கடையில் வியாபாரமான தொகையை கடைக்கு உள்ளே இருக்கும் லாக்கரில் ரூ.4,83,390 பணத்தை வைத்து விட்டு வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற சிலர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடம் வந்த இலுப்பூர் போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்த போது உள்ளே லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது.
அதில் வைத்திருந்த ரூ. 4,83,390 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதற்கிடையே தகவல் அறிந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசுந்தரதேவி சம்பவ இடத்தை பார்வையிட்டு ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.