தமிழ்நாடு

ஒரு நாள் போலீஸ் காவல்- பாதிரியாரிடம் சைபர் கிரைம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

Update: 2023-03-28 05:36 GMT
  • சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
  • லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டது.

நாகர்கோவில்:

கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர் இளம்பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் பேச்சிபாறையைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோமீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாதிரியார்பெனடிக்ட் ஆன்றோவை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.அவரை வருகிற4-ந் தேதி வரை ஜெயிலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாதுகாப்பு கருதி அவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். பாதிரியாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன் ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிற்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டது. மேலும் ஆபாச சாட்டிங் குறித்த விவரங்களையும் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் கேட்டறிந்தனர். யார்? யாருடன் அவர் தொடர்பு வைத்திருந்தார் என்பது குறித்த விவரங்களும் கேட்கப்பட்டது.

அதற்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதில் அளித்தார். லேப்டாப்பில் இருந்த பெண் குறித்த விபரங்களை போலீசார் கேட்டபோது பாதிரியார் தான் அந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும் பாதிரியார் என்பதால் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்றும் இருவரும் விருப்பப்பட்டு பிரிந்து சென்றதாகவும் கூறினார்.

தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை முடிந்து இன்று மாலை அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுகிறார்.

Tags:    

Similar News