தமிழ்நாடு

பெரியபாளையம் கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு

Published On 2022-06-30 06:47 GMT   |   Update On 2022-06-30 08:02 GMT
  • பெரிய பாளையம்கோவிலில் உள்ள தங்க நகைகளை இன்று முதலீடு செய்ததன் மூலம் மாதமொன்றுக்கு ரூபாய் ஒரு கோடி வட்டி கிடைக்கும்.
  • சிறுவாபுரி முருகன் கோவிலில் நவம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

பெரியபாளையம்:

கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித்தொகை கோவில் திருப்பணி மற்றும் வளர்ச்சிப்பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் பெரிய பாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் பக்தர்களால் காணிக்கையாக கிடைத்ததில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த தங்கத்தை வங்கியில் முதலீடு செய்யும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு கோவிலுக்கு சொந்தமான 130 கிலோ 512 கிராம் தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய ஒப்படைத்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரிய பாளையம்கோவிலில் உள்ள தங்க நகைகளை இன்று முதலீடு செய்ததன் மூலம் மாதமொன்றுக்கு ரூபாய் ஒரு கோடி வட்டி கிடைக்கும். 18 மாதங்களில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் உள்பட 3 கோவில்களில் தங்கத்தேர் செய்து முடிக்கப்படும்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் நவம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜி, எம்.எல்.ஏக்கள் டி.ஜே.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்களின் முதன்மை செயலாளர் எம்.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கோவிலின் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோக மித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News