தமிழ்நாடு செய்திகள்

பெரம்பலூர் பட்டதாரி சிற்பியின் கைவண்ணத்தில் உருவான 2 இஞ்ச் விநாயகர் மர சிற்பம்: குவியும் பாராட்டுகள்

Published On 2023-08-28 09:49 IST   |   Update On 2023-08-28 09:49:00 IST
  • தமிழகத்தின் பிரம்மாண்ட தேர்கள், தெய்வச் சிலைகள், அலங்கார கதவுகள் கலைநயத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கிறார்கள்.
  • சமீபத்தில் வெட்கப்படும் ஒரு பெண்ணின் முகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருந்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ளது தழுதாழை கிராமம். இது மரச்சிற்பத்திற்கு பெயர் பெற்றது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மர சிற்ப கலைஞர்கள் வசித்து வருகின்றனர்.

தமிழகத்தின் பிரம்மாண்ட தேர்கள், தெய்வச் சிலைகள், அலங்கார கதவுகள் கலைநயத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கிறார்கள்.

இங்கு உற்பத்தியாகும் சிலைகள் வெளிமாநிலங்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்க தயாரித்த மர சிற்பங்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த கைவினை பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றது.

தேக்கு இலுப்பை வாகை மாவலிங்கை மரங்களில் இந்த கலைஞர்களால் செதுக்கப்படும் தெய்வங்களின் சிற்பங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அரை அடி முதல் ஆறடி உயரமுள்ள சிற்பங்களை வடிவமைக்கின்றனர்.

இந்த மாவட்டத்தின் அடையாளமாக திகழும் மரச் சிற்பங்களுக்கு கடந்த 2021ல் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது.

சமீப காலமாக கையளவுகளில் செதுக்கப்படும் கடவுள்கள் சிற்பங்கள் மற்றும் திருவள்ளுவர் சிற்பங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தங்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கீ செயின்களில் சிற்பங்களை மாட்டி விடுகிறார்கள்.

இந்த கலைஞர்களில் சாமிநாதன் (வயது 37) என்பவர் பூவரசு மரத்தில் கடவுள்கள் சிலைகளை செதுக்கி பாராட்டு பெற்றார்.

சமீபத்தில் வெட்கப்படும் ஒரு பெண்ணின் முகத்தை தத்ரூபமாக வடிவமைத்திருந்தார்.

அது மட்டுமில்லாமல் ஒன்றே முக்கால் அடியில் கருங்காலி மரத்தில் வராகி அம்மனை வடிவமைத்தார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்த விழாவை வரவேற்கும் விதமாக சாமிநாதன் 2 இஞ்ச் உயரத்தில் விரிந்த காதுகளுடன் அழகாக செதுக்கியுள்ளார்.

இதனை பூஜை அறையில் வைத்து வழிபடலாம். மாட்டிக்கொள்ளலாம். 3 நாட்களில் இந்த சிலையை வடிவமைத்ததாக சாமிநாதன் கூறினார்.

Tags:    

Similar News