தமிழ்நாடு

கோவை-நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

Published On 2023-05-01 05:22 GMT   |   Update On 2023-05-01 05:22 GMT
  • சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன.
  • கோவை குற்றாலத்திலும் தண்ணீர் விழத் தொடங்கி உள்ளதால் அங்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டது.

ஊட்டி:

கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் குளுகுளு காலநிலை நிலவும் நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

கடந்த 3 நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட அதிக கூட்டத்தை காண முடிந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. அதனை அனுபவித்தபடியே சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.

தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம், குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களிலும் குவிந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

கடந்த 8 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் ஊட்டிக்கு வந்துள்ளனர். நேற்றும், இன்றும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ஏராளமானோர் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் சுற்றுலா தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சர்க்கியூட் பஸ்கள் இயக்கப்பட்டன. அதனை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் பல இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன. இன்னும் பல நாட்களுக்கு ஓட்டல்கள் முன்பதிவு மூலம் நிரம்பி உள்ளன. இந்த மாதம் கோடை விழா நடைபெற உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான வால்பாறை, டாப்சிலிப், ஆழியாறு உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. வால்பாறையில் அவ்வப்போது லேசான மழையுடன் இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவித்தபடி கூழாங்கல் ஆறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள்.

அங்குள்ள விடுதிகள் நிரம்பி வழிந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தனர். பலர் தங்களது சுற்றுலா திட்ட நேரத்தை குறைத்துக்கொண்டு திரும்பிச் சென்றனர்.

இதேபோல கோவை குற்றாலத்திலும் தண்ணீர் விழத் தொடங்கி உள்ளதால் அங்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டது.

Tags:    

Similar News