தமிழ்நாடு

பருத்தி மேனி குப்பம் கிராம மக்களுக்கு சுடுகாடு வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-12-04 10:53 GMT
  • ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
  • பருத்தி மேனிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தும்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பருத்தி மேனி குப்பம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராம மக்களுக்கு என்று தனியாக சுடுகாடு இல்லை. இங்கு வசிப்பவர்களில் யாராவது? இறந்து போனால் ஆரணி ஆற்றைக் கடந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அவர்களது உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆரணி ஆற்றில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அந்த காலகட்டங்களில் யாராவது? இறந்து போனால் உயிரை பணயம் வைத்து ஆற்றுநீரை கடந்து சென்று இறந்தவர்களின் உடலை கிராம மக்கள் அடக்கம் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இக்கிராமத்தைச் சேர்ந்த மோகனா(வயது55) என்பவர் அகால மரணம் அடைந்தார். இதனால் பருத்தி மேனி குப்பம் கிராம மக்கள் அவரது உடலை இடுப்பு அளவு தண்ணீரில் ஆரணி ஆற்றை கடந்து சென்று கீழ் மாளிகை பட்டு கிராமத்தில் அடக்கம் செய்தனர். எனவே, பருத்தி மேனிகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு ஒன்று அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதி மக்களின் மிக முக்கிய தேவையான சுடுகாடு வசதியை செய்து தர ஊராட்சி மன்ற தலைவர் மாலா, ஒன்றிய கவுன்சிலர் புஷ்ப முருகன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன் ஆகியோர் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து பருத்தி மேனி குப்பம் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News