தமிழ்நாடு

மாணவன் சாம்பசிவன்

மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்

Published On 2023-07-20 04:36 GMT   |   Update On 2023-07-20 04:36 GMT
  • சாம்பசிவன் இ.சி.ஆர். சாலையை கடக்கும்போது எதிரில் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.
  • தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கிய மாணவனின் பெற்றோர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்பேட்டை யை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 42). இவருடைய மனைவி சத்யா (38). இந்த தம்பதியினரின் மகன் சாம்பசிவன் (வயது 12). இவர் அனுமந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த 14-ந் தேதி தனது வீட்டிலிருந்து சைக்கிளில் சென்றார். சாம்பசிவன் இ.சி.ஆர். சாலையை கடக்கும்போது எதிரில் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணவன் சாம்பசிவனை அவரது பெற்றோர் மரக்காணத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு அவருக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவன் சாம்பசிவனின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவர் மூளைச்சாவு அடைந்து விட்டார். இதனால் இவர் உயிர் பிழைக்க முடியாது எனக் கூறினர். இதனால் மனமுடைந்த அவரின் பெற்றோர் தனது மகன் உயிரிழந்தாலும், அவரது உடல் உறுப்புகளை பெற்று பலர் உயிர் பிழைக்கலாம் என கருதி தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மூளை சாவடைந்த மாணவன் சாம்பசிவனை ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இருந்து சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சைகள் செய்து தேவையான உடல் உறுப்புகளை எடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 9 பேருக்கு பொருத்தப்படுவதாகவும் கூறி உள்ளனர்.

இதனை கேட்ட மாணவனின் பெற்றோர் தனது மகன் உயிர் இழந்து அவரது உடல் மறைந்தாலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக பெற்று உயிர் பிழைத்தவர்களை பார்க்கும்பொழுது தன் மகன் உயிரோடு இருக்கும் நினைவு உண்டாகும் என கூறுகின்றனர். தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கிய மாணவனின் பெற்றோர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

Tags:    

Similar News