நிரம்பி வழியும் வல்லூர் அணைக்கட்டு
- கோடையின்போது படிப்படியாக நீர் இருப்பு குறைந்து, கடந்த இரு மாதங்களாக அணைக்கட்டு பகுதி வறண்டு கிடந்தது.
- ஆர்ப்பரித்து செல்லும் உபரிநீரிலும், அணைக்கட்டில் தேங்கியுள்ள தண்ணீரிலும், இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளித்து விளையாடி வருகின்றனர்.
மீஞ்சூர்:
மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, வல்லுார் அணைக்கட்டு அமைந்து உள்ளது. கடந்த ஆண்டு மழையின்போது அணைக்கட்டு நிரம்பியது.
கோடையின்போது படிப்படியாக நீர் இருப்பு குறைந்து, கடந்த இரு மாதங்களாக அணைக்கட்டு பகுதி வறண்டு கிடந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி முதல், பூண்டி ஏரியில் உபரிநீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, கொசஸ்தலை ஆற்றிற்கு நீர்வரத்து துவங்கியது.
நீர்வரத்து அதிகரித்த நிலையில், சோழவரம் பகுதியில் உள்ள புதுகுப்பம், ஜெகன்னாதபுரம், வன்னிப்பாக்கம் தடுப்பணைகள் நிரம்பின. நேற்று அதிகாலை 4 மணி முதல், வல்லுார் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் இருந்து, வினாடிக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேறி, எண்ணுார் கடலை நோக்கி பாய்கிறது. ஆர்ப்பரித்து செல்லும் உபரிநீரிலும், அணைக்கட்டில் தேங்கியுள்ள தண்ணீரிலும், இளைஞர்கள் ஆபத்தை உணராமல் குளித்து விளையாடி வருகின்றனர்.
பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் மற்றும் சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் தினமும் பெய்து வரும் மழையால், இரண்டு மாதங்களுக்கு முன்னரே வல்லுார் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.