தமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது ஏன்? ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

Published On 2023-08-07 11:30 GMT   |   Update On 2023-08-07 11:30 GMT
  • ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும்.
  • ஆன்லைனில் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது.

சென்னை:

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசாங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களின் விவரங்கள்:

இந்த விளையாட்டு பொது ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதால் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும் போதுதான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். இந்த விளையாட்டை வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர். விளையாடுவோரின் சுய அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது என இந்த நிறுவனங்கள் விளக்குவதில்லை. மேலும் விளையாடுபவர்கள் தாங்கள் வென்ற முழு தொகையையும் தாங்களே எடுத்து கொள்ள முடியாது. ஒரு பகுதியை ஆன்லைன் நிறுவனங்கள் எடுத்து கொள்ளும். நேரடியாக விளையாடும்போது முழு பணமும் கையில் கிடைக்கும். இவ்வாறு அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் அரசாங்கத்தின் சார்பாக அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரமும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர் ஆஜராகிறார்கள்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 14ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Tags:    

Similar News