தமிழ்நாடு

கியாஸ் கசிந்த பகுதிகளை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு செய்ததையும், மீட்டர் மூலம் கணக்கிட்டதையும் படத்தில் காணலாம்.

எண்ணெய் கிணற்றில் கியாஸ் கசிந்த பகுதிகளை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-10-09 03:57 GMT   |   Update On 2023-10-09 03:57 GMT
  • ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கியாஸ் வெளியேறும் பகுதியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • அலுவலர்கள் பெரியக்குடி கிராமத்திற்கு நேரில் சென்று மூடப்பட்ட கிணற்றை பார்வையிட்டனர். பின்னர், மீட்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர்.

மன்னார்குடி:

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதித்து எண்ணெய் எடுக்கும் திட்டத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுத்தி வந்தது.

அதன்படி, திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி, பெரியக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2 எண்ணெய் கிணறுகளை அமைத்து இருந்தது. இதில் ஒரு கிணற்றில் கடந்த 2013-ம் ஆண்டு அதிக அழுத்தம் காரணமாக கியாஸ் வெளியேறியது.

இதனால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து இந்த எண்ணெய் கிணறுகள் மூடப்பட்டது.

இந்நிலையில் பெரியக்குடி கிராமத்தில் மூடப்பட்ட ஒரு எண்ணெய் கிணற்றில் இருந்து நேற்று காலை திடீரென அதிகளவில் கியாஸ் கசிந்தது. தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கியாஸ் வாசனை வீசத்தொடங்கியது. அவ்வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அதிகளவில் கியாஸ் வாசனை வீசத்தொடங்கியதால் கிராமமக்கள் பெரிதும் அச்சம் அடைந்தனர்.

எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதால் உடனடியாக ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கியாஸ் வெளியேறும் பகுதியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் பெரியக்குடி கிராமத்திற்கு நேரில் சென்று மூடப்பட்ட கிணற்றை பார்வையிட்டனர். பின்னர், மீட்டர் கருவி மூலம் ஆய்வு செய்தனர். இதில் ஆயில் மற்றும் கியாஸ் எதுவும் வெளியாக வில்லை எனவும் காற்று மட்டுமே வருகிறதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இதனை இன்னும் 2 நாட்களில் நிறுத்தி விடுவோம் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News