தமிழ்நாடு

புழல் சிறை காவலரிடம் நூதன முறையில் ரூ.13 ஆயிரம் பணம் பறிப்பு- வடமாநில கும்பல் கைவரிசை

Published On 2023-07-09 10:24 GMT   |   Update On 2023-07-09 10:24 GMT
  • ஜெயசீலனின் செல்போன் எண்ணுக்கு அந்த வாலிபர் உங்களது வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
  • சிறிது நேரத்திலேயே ஜெயசீலனின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோனது.

சென்னை:

வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி அதுதொடர்பான விவரங்களை கேட்டு வாங்கி மோசடி செய்யும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் புழல் சிறை காவலரான ஜெய சீலனிடம் போனில் குறுஞ்செய்தி அனுப்பிய வட மாநில வாலிபர் ஒருவர் ரூ.13 ஆயிரத்து 700-ஐ பறித்துள்ளார். ஜெயசீலனின் செல்போன் எண்ணுக்கு அந்த வாலிபர் உங்களது வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதனை பார்த்ததும் குறுஞ்செய்தி லிங்க்கில் போய் பான் கார்டு மற்றும் வங்கி தொடர்பான விவரங்களை ஜெயசீலன் அளித்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே ஜெயசீலனின் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோனது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயசீலன் இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடமாநிலங்களை சேர்ந்த மோசடி நபர்கள் இதேபோன்று குறுஞ்செய்தியை அனுப்பி தொடர்ச்சியாக பணம் பறிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News