தமிழ்நாடு
மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக உவரி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.

கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்

Published On 2023-03-20 05:04 GMT   |   Update On 2023-03-20 05:04 GMT
  • நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
  • கடந்த 25 வருடங்களாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகிறோம்.

திசையன்விளை:

தமிழகத்தில் பாரம்பரியமாக நாட்டு படகு மூலம் மீன் பிடிக்கும் ஒரே மாவட்டம் நெல்லை மாவட்டம் தான். இங்கு ராதாபுரம் தாலுகாவில் கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, தோமையார்புரம், கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன.

இதில் கூட்டப்புளி மற்றும் கூடுதாழை ஆகிய இரு மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு கிடையாது. இதனால் கடல் அலை இந்த கிராமங்களை பாதித்து வருகிறது. மீனவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் என்று புகார்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கூடுதாழை மீனவ கிராமத்தில் கடல் அரிப்பின் வேகம் அதிகரித்து கடற்கரை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீனவர்களின் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி என்ஜீன்கள் ஆகியவை கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

இந்த கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் கூடுதாழையில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மீனவர்கள் கடந்த 11-ந்தேதியில் இருந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று 10-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உண்ணாவிரதத்திலும் இருக்க போவதாக அறிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்திலும் கூடுதாழை மீனவர்களுக்கு ஆதரவாக புன்னக்காயல், ஆலந்தழை, அமலிநகர், பெரியதாழை, குலசேகரபட்டினம், மணப்பாடு பகுதிகளில் வசிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கூறுகையில், கடந்த 25 வருடங்களாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். தற்பொழுது 100 அடி வரை கடல் ஊருக்குள் புகுந்து உள்ளதால் மணல்மேடுகள் மட்டுமே உள்ளது.

இது இன்னும் ஓரிரு நாட்களில் சரிந்து விடும் என்றும் இதனால் பல வீடுகள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது என்றனர்.

Tags:    

Similar News