தமிழ்நாடு

கோயம்பேடு சாலை சந்திப்பில் ரூ.10 கோடியில் நவீன பூங்கா- அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு

Published On 2023-05-11 09:54 GMT   |   Update On 2023-05-11 09:54 GMT
  • 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம்.
  • மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஒரு மினி விளையாட்டு மைதானத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றோம்.

சென்னை:

சென்னை, கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும், சென்னை, தியாகராய நகர், சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், சென்னை, மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கோயம்பேடு பாலத்திற்கு கீழே இருக்கின்ற நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். அதே போல, சென்னை, தியாகராய நகர், சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு என்று தனி மைதானம், டென்னிஸ் கோர்ட் மற்றும் பூங்கா வசதி, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்து வதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். அதன் தொடர்ச்சியாக சென்னை, மயிலாப்பூர் முண்டகக் கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஒரு மினி விளையாட்டு மைதானத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்தல், கிழக்கு கடற்கரை சாலையிலே 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை அமைத்தல், கடற்கரை பார்வதி நகர் முதல் எண்ணூர் கடற்கரை பகுதியில் 5 கி.மீ. நீளத்திற்கு அழகுபடுத்துதல் மற்றும் மகாபலிபுரத்தில் பஸ் நிலையம் அமைத்தல் போன்ற பணிகளும் இதில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, எம்.எல்.ஏ.க்கள் எம்.வி.பிர பாகர ராஜா, ஜெ.கருணாநிதி, த.வேலு, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News