தமிழ்நாடு

மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர்

Published On 2024-01-30 04:08 GMT   |   Update On 2024-01-30 08:41 GMT
  • திருவான்மியூர் பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர், சிறுசேரி பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
  • திருவான்மியூர் பகுதியில் இருப்பவர்களுக்கு கோயம்பேடு வந்தாலும் ஒரே தூரம்தான். கிளாம்பாக்கம் வந்தாலும் ஒரே தூரம்தான்.

சென்னை:

வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து இன்று பஸ்கள் இயக்கப்படுவதை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. அதனால் கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் 80 சதவீத பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் 20 சதவீத பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில், இப்போது மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 20 சதவீத பஸ்களை இன்று துவக்கி வைத்துள்ளோம்.

வடசென்னை பகுதியை சேர்ந்த மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்து மாதவரத்தில் இருந்து இந்த பஸ்களை இயக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

மாதவரத்தில் இருந்து திருச்சிக்கு 18 நடைகள், சேலத்துக்கு 17 நடைகள், விருதாச்சலத்துக்கு 6 நடைகள், கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரம் 16, கும்பகோணம் 14, சிதம்பரம் 5, நெய்வேலி 11, புதுச்சேரி வழியாக கடலூருக்கு 5 நடைகளும், திண்டிவனத்துக்கு 10 நடைகள், திருவண்ணாமலை, செஞ்சி வழியாக 22 நடைகள், போளூர், வந்தவாசிக்கு 20 நடைகளும் என 160 நடைகள் இயக்கப்பட உள்ளது.

ஏற்கனவே இங்கிருந்து திருப்பதிக்கு 90 நடைகள் இயக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கிளாம்பாக்கத்திற்கு சென்று அங்கிருந்து பஸ் மாற வேண்டும் என்ற சூழல் இல்லாமல், இங்கிருந்தே மக்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல வாய்ப்பாக அமையும்.

குறிப்பாக திருவொற்றியூர், ராயபுரம், ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஒருநிலை இருந்ததை மாற்றி மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் புறப்படும். மாதவரம் பைபாஸ் வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படும்.

2 ஆயிரம் நடைகள் கிளாம்பாக்கத்தை தொட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் கூடுதலாக 1400 நடைகள் இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கத்தில் இருந்து இப்போதைக்கு கோயம்பேட்டுக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும், தாம்பரத்திற்கு 2 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு 3 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி, திருவான்மியூர் பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர், சிறுசேரி பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேட்டுக்கு எப்படி இணைப்பு இருந்ததோ அதேபோல கிளாம்பாக்கம் சென்று பஸ் பிடிப்பதற்கு எல்லா பகுதியில் இருந்தும் பஸ் இயக்கப்படுகிறது.

கேள்வி:- பொதுமக்கள் வீட்டில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்வது பெரிய சவாலாக உள்ளது என்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு கிளாம்பாக்கம் எங்கிருக்கு என்பதே தெரியாது என்கிறார்களே?

பதில்:- ஏற்கனவே பாரிமுனையில் இருந்து கோயம்பேடுக்கு பஸ் நிலையத்தை மாற்றிய போதும் இதுபோன்ற சிரமம் இருந்தது. மக்களுக்கு புரிதல் வரும் வரை அந்த சிரமம் இருந்தது. அதேபோல்தான் இப்போது கிளாம்பாக்கம் பஸ் முனையத்துக்கு செல்லும்போது சிரமம் இருக்கலாம்.

இந்த பேருந்து முனையத்தை அ.தி.மு.க. ஆட்சியில்தான் திட்டமிட்டார்கள். ஆனாலும் நாங்கள் அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை கைவிடவில்லை.

ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைந்தால் சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்கிற காரணத்தால் அதில் செயல்படுத்தபடாமல் இருந்த 70 சதவீத பணிகளை செயல்படுத்தி முழு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.

ஒரு விமான நிலையத்துக்கு இணையான தரத்தில் புதிய பேருந்து முனையம் அமைந்துள்ளது. ஏற்கனவே தாம்பரம் போன்ற பகுதிகளில் இருப்பவர்கள் கோயம்பேடுக்கு வந்து பஸ் ஏற எவ்வளவு தூரம் இருந்ததோ அதே தூரம் தான் கிளாம்பாக்கம் செல்வதற்கும் ஆகிறது.

திருவான்மியூர் பகுதியில் இருப்பவர்களுக்கு கோயம்பேடு வந்தாலும் ஒரே தூரம்தான். கிளாம்பாக்கம் வந்தாலும் ஒரே தூரம்தான்.

வடசென்னை பகுதியில் இருப்பவர்களுக்கு இப்போது அந்த பிரச்சனை வராமல் இருப்பதற்காகத் தான் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

எனவே சிரமம் இல்லாமல் அவர்கள் செல்வதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News