தமிழ்நாடு

தி.மு.க. ஆட்சி வந்த ஓராண்டில் ரூ.3,000 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு

Published On 2022-07-15 05:21 GMT   |   Update On 2022-07-15 07:25 GMT
  • தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை புனரமைத்து, குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
  • மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலில் ரூபாய் 80 லட்சம் செலவில் திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மிகவும் பழமை வாய்ந்த பூமீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைப்பது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்குப் பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை புனரமைத்து, குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலில் ரூபாய் 80 லட்சம் செலவில் திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் திருத்தேர் செய்யவும், ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் கோயில் குளத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இக்கோவில் குடமுழுக்கு விழா, கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. திருப்பணிகள் முடிவுற்று, இன்னும் 6 மாத காலத்தில் இக்கோவில் குடமுழுக்கு நடத்தப்படும்.

இதுமட்டுமின்றி, இக்கோவிலில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றும், ராஜகோபுரத்தை மீண்டும் கட்ட வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்களின் இந்த கோரிக்கைகள் குறித்து, பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 1,500 கோடி செலவில் ஆயிரம் கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 100 கோடி செலவில் 80 கோவில்கள் புனரமைக்கப்பட்டு, நிகழாண்டிலேயே குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டில் ரூ. 3,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News