தமிழ்நாடு

உயிர்சேதம் இல்லாமல் உற்சாகமாக நடந்த தீபாவளி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2023-11-13 06:05 GMT   |   Update On 2023-11-13 10:47 GMT
  • கடந்த ஆண்டும் 38 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு இல்லை.
  • உயிரிழப்பு இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது.

சென்னை:

தமிழகத்தில் உயிர்சேதம் எதுவுமில்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிப்பதில் தீக்காயத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

கடந்த 2020-ம் ஆண்டு 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஒருவர் உயிரிழந்தார். 2021-ல் 30 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டும் 38 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிரிழப்பு இல்லை.

இரண்டு ஆண்டுகளாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் உயிரிழப்பு இல்லாமல் தடுக்க தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகம் முழுவதும் 95 அரசு மருத்துவ மனைகளில் மொத்தம் 750 படுக்கைகளும் சிறப்பு தீக்காயம் வார்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் மட்டும் லேசான தீக்காயங்களுடன் 15 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். தமிழகம் முழுவதும் 30 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்போ உயிர்சேதமோ ஏற்படவில்லை. உயிரிழப்பு இல்லாமல் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்தது.

இதற்கு முக்கிய காரணம் விழிப்புணர்வுதான். காவல்துறை, தீயணைப்புத் துறை மாசு கட்டுபாட்டு வாரியம், சேவை துறைகள், பள்ளி ஆசிரியர்களின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News